×

தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிவு: ஆண்டிபட்டி மலர்சந்தையில் செண்டுமல்லி, கோழிகொண்டை பூக்கள் கிலோ ரூ.10க்கு விற்பனை!!

தேனி: தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ஆண்டிபட்டி மலர் சந்தையில் பெரும்பாலான பூக்களின் விலை சரிந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்னியப்பிள்ளை பட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை, முல்லை, ரோஜா உள்ளிட்ட ஏராளமான பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் தெப்பம்பட்டி சாலையில் உள்ள மலர்சந்தையில் ஏலம் விடப்படுகிறது. தற்போது தொடர்ச்சியாக முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தால் மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ செண்டுமல்லி கிலோ ரூ.10க்கும், கோழிக்கொண்டை கிலோ ரூ.10க்கும், செவ்வந்தி, பன்னீர் ரோஜா கிலோ ரூ.20க்கும். அரளி மற்றும் சம்பங்கி பூக்கள் ஆகியவை கிலோ ரூ.100க்கும் விலை போனது.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது; ஆண்டிபட்டி மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. தை மாதம் பிறந்தால் அனைத்து பூக்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்த்த நிலையில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வருவாய் இழப்பைச் சமாளிக்க கிடைத்த விலைக்கு உள்ளூர் சில்லறை வியாபாரிகளிடம் பூக்களை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தொடர் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிவு: ஆண்டிபட்டி மலர்சந்தையில் செண்டுமல்லி, கோழிகொண்டை பூக்கள் கிலோ ரூ.10க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : ANTIPATHI ,Theni District ,Andipatti ,Antipatti ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை